Home புதினங்களின் சங்கமம் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சுந்தரலிங்கம் அகாலமரணமானது ஏன்?

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சுந்தரலிங்கம் அகாலமரணமானது ஏன்?

கனடா நாட்டில் இருந்து உறவினர்களை பார்ப்பதற்கு தாயகம் வந்த முதியவர் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம்(8) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் நேற்று(9) இரவு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மீசாலை வடக்கு பகுதியினை சேர்ந்த சின்னத்தம்பி சுந்தரலிங்கம் வயது(83) என பொலிஸார் கூறினர். உயிரிழந்த இந்த முதியவரின் பிள்ளைகள் அமெரிக்கா நாட்டில் வசித்து வருகின்றனர்.

இவர் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி உறவினர்களை பார்ப்பதற்கு தாயகம் வந்துள்ளார். நேற்றுமுன்தினம்(8) மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பழையமாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக இவரை மோதி தள்ளியுள்ளது. விபத்தில் காயமடைந்த முதியரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.