மைத்திரி கொலைச் சதி!! முன்னாள் புலி உறுப்பினரை சந்தித்தது ஏன்??
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில்,
சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்பில் நேற்று பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னாள் புலி உறுப்பினரான புஷ்பராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தரப்பு சந்தித்ததாக கூறப்படும் நிலையில்,
அச்சந்திப்பு தொடர்பிலான தகவல்கள் நேற்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் சட்டத்தரணி அஜித் பத்திரணவால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிந்திருந்த நிலையிலேயே புஷ்பராஜை கிழக்கில் வைத்து நாலக சில்வா தரப்பு சந்தித்ததாகவும், கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் இடம்பெற்ற இரகசிய விசாரணை நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே அந்த சந்திப்பு இருந்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளை தமது சேவை பெறுநரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவே முன்னெடுத்ததாகவும், அதன் அறிக்கையை அவர் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும்,
அவ்வறிக்கை பிரகாரம் மேலதிக நடவடிக்கைகள் பல பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சந்திப்பில் புஷ்பராஜுடன் பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது தொடர்பில் அச்சந்திப்பின் முழுமையான ஒலி வடிவ பதிவை சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும்,
அதனால் புஷ்பராஜுடன் கலந்துரையாடியதை கொலை சதிக்கான ஆதாரமாக காட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்யவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ்ஸை கொழும்பில் வைத்து கொலை செய்யவும் சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
சி.ஐ.டி. சார்பில் அதன் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணை தொடர்பான பொலிஸ் பரிசோதகர் இக்பால் மற்றும் சார்ஜன்ட் ரத்னபிரிய ஆகியோர் மன்றில் ஆஜராகினார்.
கடந்த 6 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடந்த 19 ஆம் திகதி சி.ஐ.டி.யால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட, இவ்விவகாரத்தின் சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்த அறிக்கையை மையப்படுத்தி அவரது சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.
அந்த சாட்சியங்கள் சுருக்க அறிக்கையில் 8 பிரதான காரணிகளும் 16 உப காரணிகளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான சான்றுகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,
அவை அனைத்தையும் மறுத்த சட்டத்தரணி அஜித் பத்திரண அதில் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றாக இல்லை என வாதிட்டார்.
குறித்த சி.ஐ.டி. அறிக்கையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2(1) அ,ஊ மற்றும் 3 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்த ஏதுவான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. குறிப்பிட்டுள்ள போதும், அவ்வாறு எதுவும் இல்லை என சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.
தனது சேவை பெறுநரான நாலக சில்வா கைது செய்யப்பட முன்னர் சி.ஐ.டி.க்கு வழங்கிய 5 நாள் வாக்குமூலத்தை சி.ஐ.டி. ஏன் நீதிவானுக்கு சமர்ப்பிக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர்,
அதில் அத்தனை கேள்விகளுக்குமான பதில்களும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.