யாழ் சர்வதேச விமான நிலையத்தை ஆறுமுகநாவலர் விமானநிலையம் என்று மாற்றுங்கள்!! கிளம்பிட்டாங்கையா… கிளம்பிட்டாங்க…

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயரை ஆறுமுக நாவலர் விமான நிலையம் என
மாற்றப்பட வேண்டுமென கூறியுள்ளது சிவசேனை.

அண்மைநாட்களாக எந்த பரபரப்பு அறிக்கையையும் வெளியிடாமல் மௌனமாக இருந்த சிவசேனை,
சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் “கலகலப்பு“ அறிக்கையுடன் களமிறங்கியுள்ளது.

சிவசேனை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

அலையென வந்த அந்நியப் பண்பாட்டு படையெடுப்பைத் தனியொருவனாய் ஈழத்தில் தடுத்தவர்.
ஓடங்களில், வள்ளங்களில், படகுகளில், தோணிக்களில் வடகடலை கடந்து தமிழகம் சென்று மீண்டவர்.
மாட்டு வண்டிகளில், குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக
அலைந்தவர். இதையெல்லாம் செய்தவர் ஆறுமுக நாவலர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வந்து விட்டதே என தமிழர்கள் மகிழ்கிறார்கள். ஆறுமுக
நாவலர் சர்வதேச விமான நிலையம் என தமது விமான நிலையத்தை அழைக்க ஈழத்தமிழர்கள்
விரும்புகிறார்கள்.

சைவத்தமிழ் மக்கள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை வைக்க வேண்டும்.

இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் ஆறுமுக நாவலரின் பெயரே, விமான
நிலையத்திற்கு பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அறிக்கை இங்கு தரப்பட்டுள்ளது.

ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

சிவ சேனையின் செய்தியறிக்கை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தொடர் வண்டிகள் இல்லை. எந்திரக் கப்பல்களோ, வள்ளங்களோ இல்லை வானூர்திகள் இல்லை. மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள், உழவுந்துகள், மலையுந்துகள் எதுவுமே இல்லை.

ஆனாலும் பயணித்தார். மக்களுக்காகப் பயணித்தார். நாட்டுக்காகப் பயணித்தார். மரபுகளைப் பேணப் பயணித்தார். பண்பாட்டை வாழவைக்கப் பயணித்தார்.

தனக்காக எதையும் வைத்திருக்கவில்லை, சேமிக்கவில்லை, விட்டுப் போகவும் இல்லை.

நமது மண், நமது நீர், நமது வானம், நமது காற்று, நமது முன்னோர் இவற்றோடு வாழ்ந்தனர். ஒவ்வொரு செயலும் சோதனையே. நன்மை தருவனவோ? தீமை தருவனவோ? நன்மை தருவனவற்றைப் பெருக்குவதும் தீமை வருவனவற்றை ஒதுக்குவதும் ஆக, சோதனைகளின் விளைவுகளாகப் படிப்படியாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய தமிழ் மரபுகள், மண்ணின் மரபுகள் அழிந்து விடாமல் காப்பதற்காகப் பயணித்தவர்.

சொல்லில் வல்லவர். எழுத்தில் எழுஞாயிறு. சொல்லையும் செயலையும் வாழ்வாக்கியவர். சோர்விலர். அஞ்சா நெஞ்சினர். ஆற்றலர். பயணத்தையே வாழ்வாக்கியவர்.

அவரே ஆறுமுக நாவலர்.

சீனாவில் Wei Yuan (1794-1856), Li Hongzhang (1823-1901), Kang Youwei (1858-1927), Liang Qichao (1873-1929), and Tan Sitong (1865-1898) இந்தியாவில் Dayanand Saraswati (1824-1883), Vishnu Bhikaji Gokhale (1825-1871) என ஆசிய நிலப் பரப்பில் வாழ்ந்த இவரின் சம காலத்தவர் போன்றே இவரும் அலையென வந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தனி ஒருவனாய் ஈழத்தில் தடுத்தவர்.

ஓடங்களில் வள்ளங்களில் படகுகளில் தோணிகளில் வடகடலைக் கடந்து தமிழகம் சென்று மீண்டவர்.

மாட்டு வண்டிகளில் குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக அலைந்தவர்.

யாழ்ப்பாணத்திற்கு அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் வந்துவிட்டதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

தன் பயணங்களால் நாட்டுக்காக, மக்களுக்காக, கால்கள் தேய்ந்து, உடல் நலம் குன்றி வாழ்ந்த ஆறுமுக நாவலரின் பெயரே யாழ்ப்பாணம் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பெயர் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம் என்று தம் வானூர்தி நிலையத்தை அழைக்க ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள்.

சைவ தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை வைப்பதால், இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் நாவலர் அனைத்துலக ஆறுமுகநாவலர் ஆவார்.

error

Enjoy this blog? Please spread the word :)