பல்சுவை செய்திகள்

தமிழ் பெண்கள் ஏன் குண்டாகிறார்கள் தெரியுமா ???

ஓல்லிக்குச்சி உடம்புக்காரி’ இதுதான் இன்றைய உலகத்தின் மகத்தான வாக்கியம். பெண்களை ஓல்லி பெல்லியாக்கி ‘இடுப்பிருக்கா இலியானா’ என தத்துவப்பாடல் பாடும் மகா ஜனங்கள் நாங்கள். மெல்லிய பெண்கள்தான் அழகானவர்கள் என்ற அபிப்பிராயம் உலகத்திலும், நம்மத்தியிலும் ஏற்பட்டு பலகாலம்.

சீரோ சைஸ் இடை, பேலியோ (எடை குறைக்கும் உணவு முறை) என்பதெல்லாம் இன்று வெகு பிரபலம்.

சிக்கென்ற தோற்றம், ஆண்களை கவரும் மெல்லிடை, சிவப்பழகு இவைதான் பெண்களின் இலட்சணம் என விளம்பர நிறுவனங்கள் நிறுவி விட்டன. நாளாந்தம் தொலைக்காட்சிகளில் இதை சொல்லும் விளம்பரங்கள்தான் அனைத்தும். இதனாலேயே பெண்களில் பெரும்பாலானவர்களிற்கு தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை உருவாகி விடுகிறது.

நமது பெண்களில் கணிசமானவர்கள் ஓரளவு உடம்பானவர்கள். மெல்லியவர்களை போசாக்கு குறைவானவர்களாக கருதிய சமூகம் நமது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழ். சற்று பருமனாக இருந்துவிட்டாலே போதும், பெண்களின் உலகம் இருண்டு விடும். மாப்பிள்ளை எப்படி பார்ப்பது என்ற கவலை பெற்றோர்களிற்கு. பையன்கள் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்ற சோகம் பெண்களிற்கு. இதனால்தான் இன்று ஜிம்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்து விட்டது.

யாழ்ப்பாணத்தில் பெண்களிற்கான ஜிம்கள் சடுதியாக பெருகி வருவதை இதனுடன் சேர்த்து கவனிக்க வேண்டும்.

பெண்களிற்கு மெலிவுதான் அழகா என்ற விவாதத்திற்கு முன்னர், சாதாரண பெண்களால் மெலிவாக இருக்க முடியுமா என்பதே இப்பொழுது பெரிய பிரச்சனையாகி விட்டது.

நமது உணவுப்பழக்க வழக்கம், அதிக வேலைப்பளுவற்ற வாழ்க்கை போன்றன நமது உடல் பருமன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள். பாடசாலை காலத்தில் எடைகுறைவாக இருந்த பெண்கள் பலர் பாடசாலை கல்விக்கு பின்னர் அதிக எடையுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள்.

திருமணத்தின் பின், குழந்தைப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் எடை அதிகரிப்பும் பெரும்பாலானவர்களிற்கு பிரச்சனையாக உள்ளது. உணவுப்பழக்க வழக்கம், மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய வாழ்க்கைமுறைதான் குழந்தைப் பேற்றின் பின்னரும் பெண்களின் உடல் எடையையும் தோற்றத்தையும் தீர்மானிக்கும். ஆனால் நமது வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்பவை என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.

உண்மையை சொன்னால் இனிவரும் காலத்தில் நமது பெண்களிற்கு ஒல்லிபெல்லி தோற்றம் கிட்டத்தட்ட கனவாகத்தான் முடியும். காரணம்- பால்மா. இதை கேட்க உங்களிற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவம் சொல்லும் உண்மை அதுதான்.

மனிதர்கள் உடற்பருமனாக இருக்க இரண்டு காரணங்கள். ஒன்று பரம்பரை இயல்பு. இந்தவகையானவர்கள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டால் மெலிதான தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அது நன்றாக இருக்காது. அளவான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு மூலம் இவர்கள் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

உடற்பருமன் அதிகரிப்பதற்கு இரண்டாவது காரணம், உணவுப்பழக்க வழக்கம். அதிலும் குறிப்பாக, சிறு வயதில் அதிகமாக பால்மா பயன்படுத்துபவர்கள் வளர்ந்ததும் எடை அதிகரிப்பிற்கு ஆளாகிறார்கள். முன்னைய காலத்தில் பிள்ளைகளிற்கான ஆரோக்கிய உணவு தாய்ப்பால்தான். சுமார் மூன்று வயதுவரையும் குழந்தைகள் தாய்ப்பால்தான் அருந்தினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ். வேலை, நாகரிகம், உடற்தோற்றம் என்பவற்றை கருத்தில் கொண்டு பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை வெகுவாக குறைத்து விட்டார்கள். மூன்று மாதங்களின் பின்னர் பால்மா ஊட்டத் தொடங்குகிறார்கள்.

பால்மாவில் அதிகமான கொழுப்பு உள்ளது. கொழுப்பு கலங்களை உடலில் அதிகரிக்க செய்கின்றன. அதிகளவான கொழுப்பு சேர்க்கப்பட்ட பால்மாக்களை பாவிக்க, குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சி, உடற்தோற்றத்தை பெறுகிறார்கள். இதன் விலையை அவர்கள் நடுத்தர வயதிலேயே கொடுக்கிறார்கள். உடலில் அதிக கொழுப்பு கலங்கள் சேர்வதால் பாடசாலை காலத்தின் பின்னர் திடீர் எடை அதிகரிப்பிற்கு ஆளாகிறார்கள். பாடசாலை காலத்தில் ஓடியாடி திரிவதால் உடல் எடை சமனிலையில் இருக்கிறது.

கர்ப்பகாலத்தில் அதி போசாக்கு மா வகைகளை உட்கொள்வதும் தாய், சேய் பருமனிற்கு காரணங்களிலொன்று.

புறெயிலர் கோழியிறைச்சி அல்லது அது சேர்க்கப்பட்ட உணவுகளை பாவிப்பதும் உடல்எடை அதிகரிப்பிற்கு காரணமாகிறது. கொழுப்பு, புரதம் உள்ளிட்ட போசாக்கை பல்வேறு வழிகளிலிருந்தும் பிரித்தெடுத்து செயற்கையாக தயார் செய்யப்பட்ட பால்மாக்கள் நிறை போசாக்கு என கருதி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவு உடல்பருமன். போசாக்கு நிறைந்ததென செயற்கையாக தயார் செய்யப்பட்ட உணவுகளில் ஆர்வம் காட்டாமல் இயற்கையான போசாக்கு உணவுகளை சரிசம விகிதத்தில் உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கும், உடல் தோற்றத்திற்கும் சிறந்தது.

பிரசவத்தின் பின்னர் பெண்கள் மெலிதாக வேண்டுமாயின் அது அவர்களின் கைகளில்தான் உள்ளது. உடலிற்கு போதிய வேலை அல்லது பயிற்சி இல்லாவிட்டால் உடல்பருமன் குறைய வாய்ப்பேயில்லை. கடை, செயற்கை போசணை உணவுகளை தவிர்த்து உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளையும், காலையுணவாக தானியங்களை உட்கொள்வதன் மூலமும் உடல்பருமனை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உணவை நிச்சயமாக வரையறைப்படுத்த வேண்டும்.

1970 களின் இறுதிக்காலத்தில்தான் இலங்கையில் பால்மா பாவனை அதிகரித்தது. இதன் பின்னர்தான் இலங்கையில் உடற்பருமனான பெண்களின் தொகை அதிகரித்தது.

பாட்டிவைத்தியம்

முன்னர் எல்லாவற்றிற்கும் கைவைத்தியம்தான் செய்தார்கள். கர்ப்பிணிகளிற்கு விசேட பால்மா எதுவும் கிடையாது. நான்கு மாதங்களின் முன்னர் சாப்பிட்டால் கருவை அழிக்ககூடிய பப்பாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை தவிர்ந்த மற்றைய எல்லா பழங்களையும் கர்ப்பிணிகள் சாப்பிட்டார்கள். இலைவகை, தானியம், சுத்தமான புல் மேய்ந்த மாட்டின் பால், முட்டை போன்றவற்றை சமிபாடு அடையும் விதமாக சிறிதுசிறிதாக உட்கொள்வார்கள். சிறிய மீன்கள், நெத்தலி, ஈரல் போன்ற சத்துணவுகளை அளவாக சேர்ப்பார்கள். வீடு கூட்டல், துடைத்தல், சமைத்தல், சட்டிபானை கழுவுதல் என அனைத்தையும் செய்வார்கள். கிளினிக் பரிசோதனைக்கும், பிரசவத்திற்கும்தான் வைத்தியசாலைக்கு போவார்கள். இப்பொழுது கால்வீக்கம், கைவீக்கம் என எல்லாவற்றிற்கும் வைத்தியசாலைக்கு செல்கிறார்கள்.

மாம்பழம் சாப்பிடுவதற்கு பதிலாக மாம்பழ யூஸ் குடிக்கிறார்கள்.
அந்தகாலத்தில் கர்ப்பிணிக்கு கால்,கை வீங்கியிருந்தால் தேங்காய்ப்பூ கீரை, வாலி அரிசி சேர்த்து அவித்து தண்ணீர் தெளித்து கொடுப்பார்கள். சிறுநீர் நன்றாக போய், வீக்கம் வற்றும். ஆனால் இப்போது அனைத்திற்கும் மருந்து, மாத்திரை. ஆதனால்தான் தாயும், குழந்தையும் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தை பேற்றின் பிறகு உடல்பருமனாவது முன்னரும் இருந்ததுதான். ஆனால், தொடர்ந்து வேலைகள் செய்வதால் சிறிதுகாலத்தில் உடல் மெலிந்துவிடும். இப்போது பருத்த உடலை குறைக்க பெண்களிற்கு வேலை வீட்டில் வேலை இல்லையே.