புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் இரு பெண்கள் செய்த அலங்கோல வேலை! (Photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான பெண்கள் இருவரும் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (22-03-2019) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு, பத்தாம் வட்டார பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு விற்பனை நடைபெற்று வருவதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழு பத்தாம் வட்டார பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்போது வீதியில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பொலித்தின் பையில் கட்டப்பட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கசிப்பு பைக்கற்றுக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்த காவல் துறை அவர் சென்று திரும்பிய வீட்டிற்கு சென்று அங்கு சோதனை செய்தபோது அங்கிருந்தும் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டில் வைத்து கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல் துறை தெரிவித்துள்ளது.