புதினங்களின் சங்கமம்

‘சஜித் பிரேமதாசவின் காதல் கதை’! யார் இந்த ஜலனி பிரேமதாச? (Photos)

அரசியல்வாதிகளும் மனிதர்களே! அவர்கள் ஒன்றும் வேறுபிறவிகள் அல்லர். பொதுச்சேவையில் அவர்களுக்கிருக்கும் அபரிமிதமான நாட்டமே அவர்களை அரசியல் வாதிகளாக மாற்றிவிடுகின்றது.

எனவே, அரசியல் வாதிகளாக மட்டுமே பார்க்கப்படும் அவர்களுக்குள்ளும் விரும்பு, வெறுப்பு, சந்தோஷம், துயரம், காதல், கஷ்டம் என அத்தனையும் உள்ளன.

அரசியலில் அவர்கள் கடந்துவந்த பாதை சம்பந்தமாக அறிந்து வைத்திருந்தாலும் அவர்களின் மறுபக்கம் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது. அவரின் பாரியார் ஜலனி பிரேமதாச குறித்தும் தகவல் அறிந்துகொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதை உணர – ஊகிக்க முடிகின்றது.

அந்தவகையில் சஜித் பிரேமதாசவின் காதல் கதையை மையப்படுத்தியதே இப்பதிவாகும்.

யார் இந்த ஜலனி பிரேமதாச?

ஜலனி பிரேமதாச தனது ஆரம்ப கல்வியை இலங்கையில் பிஷப் கல்லூரியிலும் உயர்கல்வியை இங்கிலாந்திலும், பட்டப்படிப்பை ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்டுள்ளார்.

கணக்கியல்துறை சார்ந்தே அவரது கல்வித்தகைமை அமைந்திருந்தாலும்
அழகுக்கலைமீதே அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டதால் அத்துறையிலேயே ‘தொழிற்சார்’ பயணிக்க தொடர்ந்தார்.

ஜலனியின் பெற்றோர் வர்த்தகப் பின்னணியைக்கொண்டவர்கள். கண்டியை பூர்வீகமாகக்கொண்ட ஜலனியின் தாயார் ஹேமானி விஜேவர்தன, ஐக்கிய தேசியக்கட்சிக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கிவந்துள்ளதுடன்,

அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். ஐ.தே.கவில் தொழிற்துறை பிரிவை அமைப்பதிலும் முக்கிய பங்கை வகித்தவர். தந்தை நிமால் ஜயவர்தனவும் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

சஜித்துடனான முதல் சந்திப்பு!

1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டபின்னரே அவரது வாரிசான சஜித் பிரேமதாச செயற்பாட்டு அரசியலில் குதித்தார். அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜலனியின் தாயார் ஐ.தே.கவின் செயற்பாட்டாளர் என்பதால் ரணசிங்க பிரேமதாசவின் சுச்சரித்த இல்லத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தவறாது கலந்துகொள்வார்.

இவ்வாறு நடைபெற்ற நிகழ்வில் (1998 மே 01) கலந்துகொள்வதற்காக தனது மகள் ஜலனியுடன் காரில் பயணித்துள்ளார்.

தனது நண்பரொருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இருப்பதால் அங்குசெல்லவேண்டும் என்பதற்காக காரில் இருந்து சுச்சரித்தவில் இறங்க ஜலனி மறுத்துள்ளார்.

“சரி 10 நிமிடங்கள் இருந்துவிட்டு செல்” என தாயார்கூற, அன்பு கட்டளையை ஏற்று காரிலிருந்து இறங்கினார்.

அன்றுதான் அவர் சஜித்தை முதல் தடவையாக சந்தித்துள்ளார். தான் சந்திக்கும் நபர் பிரமேதாசவின் மகன் என்பது அவருக்கு தெரியாதாம். பின்னர் அறிந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே இருவரும் பலதும் பத்தும் பேச 10 நிமிடங்கள்கூட இருக்கமறுத்த ஜலனிக்கு, சுமார் இரண்டரை மணிநேரம் அங்கேயே முகாமிட வேண்டியேற்பட்டது.

அந்த சந்திப்பையடுத்து சஜித்தின் மனதில் காதல் மலர, ஜலனியின் வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி, எப்படியோ அவரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். இருவருக்குமிடையில் உரையாடல் தொடர்ந்தது.

காலப்போக்கில் ஜலனியை திருமணம் முடிக்க அனுமதி வேண்டும் என அவரின் தயாரிடம் சஜித் கோரியுள்ளார். மகளுக்கு ஓகே என்றால் எனக்கும் சம்மதம் என அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

தொகுப்பு;

ஆர். சனத்

Image may contain: 2 peopleImage may contain: 2 people, people smiling, people standingImage may contain: 3 people, people smiling, close-up