புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டுக்குள் நுழைந்த பேருந்து!

கனடாவில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் பேருந்து நுழைந்து விபத்திற்குள்ளானது.

ஸ்காபரோ ரூஜ்பார்க் பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வீடுகள் இரண்டும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதில் ஒன்றே தமிழ் குடும்பத்தினுடையது.

நேற்று (21) அதிகாலை 1.35 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Oasis Boulevardஇல் சென்றுகொண்டிருந்த குறித்த அந்த பேரூந்து, வீதி வளைவில் கட்டுப்பாட்டினை இழந்து, தடுப்பை உடைத்துக் கொண்டு சென்று வீட்டின் முன்பகுதியில் மோதியது. இதில், அந்த வீட்டின் முன்பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. அருகிலிருந்த வீடும் சேதமடைந்தது.

இதன்போது அந்த வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளன.

பேருந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த வீடுகளில் இருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.