Vampan memes

யாழ்ப்பாணப் பெண்கள் பேஸ்புக்கில் இப்படித்தான் இருப்பார்கள்!!

திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ், சிவாஜியை பார்த்து கேட்பார்- பிரிக்க
முடியாதது எதுவோ என. தமிழும் சுவையும் என்பார் சிவாஜி. அது அந்தக்காலம்.
இந்தக்காலத்தில் அப்படியொரு கேள்வியை கேட்டால் சிவபெருமான் என்ன பதில் சொல்வார்?

சந்தேகமேயில்லாமல் பெண்களும் பேஸ்புக்கும் என்றுதான் சொல்வார். வயதுக்கு வருவதைப்போல
இப்பொழுதெல்லாம் பெண்கள் வாழ்வின் நியதிகளில் ஒன்றாகிவிட்டது பேஸ்புக். ஏ.எல் படிக்க
ஆரம்பிக்கும்போதே பாதிப்பெண்கள் பேஸ்புக்கிற்கு வந்து விடுகிறார்கள். ஏ.எல் முடிந்ததும்
மீதிப்பெண்கள் வந்து விடுகிறார்கள். மொத்தத்தில் இருபது வயதுக்குள் மொத்த பெண்களும்
பேஸ்புக்கில் சங்கமமாகி விடுகிறார்கள்.

பெண்களின் குலவழக்கம்- பார்ப்பதற்கு சாந்தமாக தெரிவது. எங்காவது முதல்முறையாக
போகும்போது பவ்வியமாக நுழைவார்கள். நான்குநாள் அங்கிருந்தால், பின்னர் குட்டிப்பூதமாக
அதளகளம் செய்து விடுவார்கள். இந்த குலவழக்கத்தை மீறாமல்தான் பேஸ்புக்கிற்குள்ளும்
நுழைகிறார்கள். வெறும் பவ்வியமல்ல, அப்படியொரு பவ்வியம். புறபைல் பிக்சராக ரோசாப்பூவை
வைத்திருப்பார்கள். எந்த ஸ்டேட்டசும் இடமாட்டார்கள். பெயரையும் நன்றாக சுருக்கி
வைத்திருப்பார்கள்.

ஒரு உதாரணம். கந்தசாமி கவிநயா என்பவர் பேஸ்புக்கில் நுழைகிறார் என வைப்போம். எப்படி
தனது பெயரை வைப்பார்? சில பெண்கள் விபரமானவர்கள். ஆரம்பத்திலேயே ஸ்டைலாக நுழைவார்கள்.
அப்பன் பெயர் ஸ்டைலாக இல்லை என, கயா என்றுதான் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பார்கள்.
கேட்டால் அப்பாவின் முதல் எழுத்தும் எனது கடைசி எழுத்தும் என சொல்லி சென்ரிமென்றாக டச்
பண்ணுவார்கள். விபரம் தெரியாத விளக்கெண்ணைகள் ஆரம்பத்தில் கந்தசாமி கவிநயா என வாக்காளர்
இடாப்பில் பெயர் எழுதுவதை போலவே அக்கவுண்ட் ஆரம்பிப்பார்கள். கண்ணுக்குள் எண்ணெய் விட்டபடி
பெண்களின் பேஸ்புக்கையே கண்காணித்துக் கொண்டிருக்கும் பக்கிகளின் ஆராய்ச்சி முடிவு என்ன
சொல்கிறதென்றால், வாக்காளர் இடாப்பில் பெயரெழுதுவதை போல அக்கவுண்ட் ஆரம்பிக்கும்
தாய்க்குலங்கள் எல்லாம் விரைவிலேயே கயா ஸ்டைலுக்கு மாறிவிடுகிறார்களாம். மாறாமல்
வாக்காளர் இடாப்பாகவே ஒரு தாய்க்குலம் இருக்கிறாரெனில், அவரை கரடி பிடித்துவிட்டதென
அர்த்தமாம். கரடி பிடித்தது மீன் (mean)- ஆண்களே உங்களைத்தான் கரடியென்கிறார்கள். அந்த
பெண்களை காதலில் வீழ்த்தி விட்டீர்களாம்!

பேஸ்புக்கிற்கு வந்த ஆரம்பத்தில் கயாக்கள் செய்வது இரண்டு விடயங்கள். ஒன்று, தமக்கு
தெரிந்தவர்களையெல்லாம் தேடித்தேடி நண்பர்களாக்குவது. சில சமயம் வேண்டப்படாத தூரத்து
உறவுகள், நெருக்கமில்லாத நண்பர்களிற்கெல்லாம் கயாக்களிடமிருந்து ப்ரெண்ட் ரெக்வெஸ்ற் வரும்.
இவ்வளவு பாசக்கார பிள்ளையாக இருக்கிறாளே என உருகிவிடாதீர்கள். உங்கள் நண்பர்கள் வட்டத்தில்
உள்ள யாரையோ ஒரு பையனை அவர் கவனிக்கத்தான் இந்த ஏற்பாடு.

கயாக்கள் செய்யும் இரண்டாவது காரியம், தாங்கள் ரொம்ப இரக்கமுள்ளவர்கள், மென்மையானவர்கள்,
சமூக சிந்தனையுள்ளவர்கள் என காட்ட முயற்சிப்பார்கள். அம்மாவை போல தெய்வமுண்டோ, நல்ல
குடும்பம் பல்கலைகழகம் என்பது மாதிரியான வசனங்களுடன் கூடிய படங்களை share பண்ணி
மொக்கை போடுவார்கள். இந்தோனேசியாவில் இரத்தம் தேவை வகை ஸ்டேட்டசையும், பகிர்ந்து
மனிதாபிமான பாகுபலியாக காட்ட முயற்சிப்பார்கள்.

கொஞ்சநாள் பேஸ்புக்கில் தவமாய் தவமிருக்க ஆரம்பித்த பின், கயாக்கள் அடுத்த ஸ்ரெப்பில் காலடி
வைப்பார்கள். நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது வகை வசனங்களுடன் சினிமா ஜோடிகளின்
படங்களை பகிர ஆரம்பிப்பார்கள். அதிலும் நன்றாக கவனியுங்கள், நம்மூர் பெண்கள் சூர்யா
ரசிகைகளாகத்தான் இருப்பார்கள்.

அடுத்தடுத்த வாரங்களில் தூங்கும்போதும் இதயம் துடிக்கிறது, சுடசுட தேனீர் குடி சுட்டபின்
என்னை நினை வகையறா கவிதைகளுடன் நம்மையெல்லாம் கொல்வார்கள்.

பேஸ்புக் வந்த சில நாட்களிலேயே அனுஷ்காவில் தொடங்கி ஐரோப்பிய அழகிவரை பலரது
புகைப்படங்களைத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இதைகூட சகித்து கொள்ளலாம். அனுஷ்காவின்
படம் என்று தெரிந்தும், இது நீங்களா? வாவ்.. வெரி கியூட் என ஜொள்ளு கொமண்டுவார்களே
சிலர், அவர்களை கழுவிலேற்றினாலும் தகும்.

இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். பத்து வருடத்திற்கு முன்னர் பள்ளிக்கூடத்தில் எடுத்த
குறூப் போட்டோவை பதிவேற்றுவார்கள். அந்த படத்தில் இருப்பவர்களை சொந்த அண்ணன்மாரால் கூட
இப்போது கண்டுபிடிக்க முடியாமலிருக்கும்.

பிள்ளையார் படம் share பண்ணிக் கொண்டிருந்த பிள்ளை திடீரென feeling alone என்று,
ஏதாவது மொக்கை கவிதைகள் பதிவிட ஆரம்பித்தால் ஆள் கிளீன்போல்டாகி விட்டார் என்று அர்த்தம்.

என்னதான் கண்ணகி வீட்டுக்கு எதிர்வீடு என்றாலும் அனேக பெண்கள் பேஸ்புக்கில் கடலை
போடுபவர்கள்தான் என அடித்து சொல்கிறார்கள் பேஸ்புக் பேச்சுலர்கள். நான் சிங்கிளாகத்தான்
இருக்கிறேன் என்பதை பேஸ்புக் உலகத்திற்கு நிரூப்பிபதற்கு பெரும்பாடு படுவார்களாம். இதை
யார் சொன்னது? பேஸ்புக் பேச்சிலர்கள்தான் சொன்னார்கள்.

தனிமையில் நிற்பார்கள், அதை பின்பக்கமாக எடுத்து போடுவார்கள். குடும்பத்துடன் நிற்பார்கள்,
நண்பிகளுடன் நிற்பார்கள். மறந்துகூட மாமன், மச்சான், ஒன்றுவிட்ட அண்ணன்மாருடன் எடுத்த
படங்களை வெளியில் விட மாட்டார்கள். கூட நிற்பவன் ஒன்றுவிட்ட அண்ணன்தான் என்பது
சொந்தங்களிற்கு தெரியும், பேஸ்புக் இரத்தத்தின் இரத்தங்களிற்கு தெரியாதே!

ஒரு பெண் காதலில் விழும்போது பேஸ்புக்கில் பல மாற்றம் தெரியும் என்கிறார்கள் ‘உள்ளூர்
நிபுணர்கள்’. அதில் முக்கியமானது, அம்மா அடுப்பிலிருந்து கறியை இறக்க, அப்படியே
போனில் சுட்டு, my cooking என பேஸ்புக்கில் தட்டிவிடுவார்கள். அதாகப்பட்டது, மாட்டிய
அப்பாவிக்கு “வேளைக்கு சமையல் பழகடா“ என்ற மெசேஜை பாஸ் பண்ணுகிறார்களாம்!

அத்துடன், இன்னொரு மாற்றம் தெரியும். அதுவரை பூவில் தொடங்கி பூனைக்குட்டி வரையான
படங்களை புறபைல் பிக்சராக வைத்திருந்தவர்கள், முதன்முறையாக தமது படங்களை அப்லோட்
செய்வார்கள். அதுகூட பரவாயில்லை. காலை, மதியம், மாலையென ஒவ்வொரு உடைமாற்றி படம்
போட்டு, பேஸ்புக்கை பப்படமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நடந்தால், அம்மணி ரொமாண்டிக் மூடில் இருக்கிறார் என்று அர்த்தமாம்!