மிகப் பெரும் போதைப் பொருள் புள்ளியான தமிழ் யுவதி கரிகா ரஜனி கொழும்பில் கைதானது எப்படி?
டுபாயில் வசிக்கும் தர்மா என்றழைக்கப்படும் தர்மசிறி பெரேரா என்ற நபரின் வழிகாட்டுதலின் பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த ரூ.45 மில்லியன் பணம் நேற்று (28) முடக்கப்பட்டது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரின் தகவலின்படி, பெண் கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடம் இருந்த 1.875 மில்லியன் ரூபாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரிகா ரஜினி செல்வதுரை என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
5000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அங்குலான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 1.875 மில்லியன் பணமும் மீட்கப்பட்டது.
இதையடுத்து, 2006 ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டம் எண். 5 இன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு விசாரணையை ஒப்படைக்க அங்குலான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததையடுத்து, இதற்கான அனுமதி வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை அங்குலான சயுருபுர பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வசிக்கும் சந்தேகநபரின் பெயரில் மொரட்டுவையில் உள்ள நான்கு தனியார் வங்கிகளில் பேணப்பட்டுள்ள நான்கு கணக்குகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், 2021 ஆம் ஆண்டு ஜோர்தானில் பணிப்பெண்ணாக இருந்தபோது முகநூல் ஊடாக பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தர்மசிறி பெரேராவை அறிந்து கொண்டார். அந்த ஆண்டின் முதல் பாதியில் அவர் இலங்கைக்குத் திரும்பியபோது, அவருக்கு வேலை வாய்ப்புத் தருவதாக தர்மசிறி உறுதியளித்தார். அவர் நாடு திரும்பியபோது மற்றொரு பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி வங்கிக் கணக்கிலக்கத்தை வாங்கியுள்ளார்.
அதன்படி, சந்தேக நபரான பெண் கணக்கு எண்ணைக் கொடுத்ததையடுத்து, அதில் ரூ.2 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தர்மசிறி IMO தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம் அங்குலானவில் தங்கியிருந்த பெண்ணின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவருக்கு 125,000 ரூபா வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது கணக்குகள் இரண்டு வங்கிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவரிடம் மேலும் இரண்டு தனியார் வங்கிகளில் கணக்குகள் இருப்பதை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்த வங்கிக் கணக்கு ஒன்றில் இரண்டு மாதங்களுக்குள் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற கூடுதல் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட ரூ.45 மில்லியன் பணம் முடக்கப்பட்டுள்ளது.