புதினங்களின் சங்கமம்

வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளராக இருந்த சந்திரராஜாவால் இடமாற்றம் பெறாமல் இருப்பதற்காக ஆசிரியைகள் சிலருக்கு நடந்த சம்பவம்!!

வன்னிப் பிரதேசத்துக்கு இடமாற்றம் வழங்கியும் பல வருடங்களாக அங்கு செல்லாது ஏய்த்து வரும் வலிகாமம் வலய ஆசிரியர்கள் சிலர் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த சந்திரராசாவால் குறித்த ஆசிரியர்களின் வன்னி இடமாற்றம் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பெண் ஆசிரியருக்கு இடமாற்றம் வரும் போதெல்லாம் கர்ப்பிணி என்று தனியார் வைத்திய சான்றிதழ் வழங்கப்படும். மூன்று மாதங்களில் பின் அதே தனியார் வைத்தியரின் அபோசன் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த குறித்த ஆசிரியை உட்பட சிலருக்கு வன்னி இடமாற்றத்துக்குப் பதிலாக மீள்குடியேற்றப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் என திருகுதாள இடமாற்றம் சந்திரராசாவால் வழங்கப்பட்டது. எனினும் குறித்த ஆசிரியை கர்ப்பிணி எனத் தனியார் வைத்திய சான்றிதழ் வழங்கப்பட்டு மீண்டும் சொந்தப் பாடசாலைக்கே தற்காலிகமாக இடமாற்றப் பட்டுள்ளார். மீள்குடியேற்றப் பாடசாலையில் சம்பளம் எடுத்தபடியே சொந்தப் பாடசாலையில் கடமையாற்றுகிறார் இந்தக் கில்லாடி ஆசிரியை.

விடயம் ஆளுநர் வரை சென்றதால் வலிகாமம் வலயத்தில் இருந்து வன்னிக்குச் செல்லாமல் ஏய்த்து வந்த 5 ஆசிரியர்களுக்கு உடனடியாக வன்னி இடமாற்றத்தை வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் இவர்கள் மேன்முறையீட்டை மாகாண கல்வித் திணைக்களத்துக்கு கொடுத்து விட்டு அமைதியாக இருக்கின்றனர்.
புதிதாக ஆசிரியர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன வன்னி வலயப் பாடசாலைகள். இந்த ஆசிரியர்களோ தாம் வன்னிக்குச் செல்ல மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.