பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு ரணிலை கூப்பிட வேண்டாம் என ஜனாதிபதி கூறினார்!! போட்டுடைத்தார் ஹேமசிறி!!
“பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தேசிய
பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி எனக்கு
அறிவுறுத்தியிருந்தார். அதனால் அவர்கள் மூவரும் கடந்த நவம்பர் முதல் பாதுகாப்புச் சபைக்
கூட்டத்துக்கு அழைக்கப்படுவதில்லை”
இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்
தெரிவுக்குழு முன்பாக இன்று முற்பகல் சாட்சியம் அளித்த போதே தாக்குதல்களையடுத்து
ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று பாதுகாப்புச் செயலர் பதவியிலிருந்து விலகிய ஹேமசிறி
பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்
ஆஜராகி சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,
பிரதமர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேசிய
பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை
.அவர்களை அழைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அன்று முதல்
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதிவரை தேசிய பாதுகாப்பு சபையின் நான்கு கூட்டங்கள் நடந்தன.
இரண்டு தடவைகள் நான் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற முயன்றேன். ஆனால்
அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்று
ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார்.
நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு
விவரிக்கும் நடைமுறை இருந்ததில்லை. அரச புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கும்
ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. நான்கு வருட காலம் ஜனாதிபதிக்கு
புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம்
கூறியிருந்தார்.
பாதுகாப்பு செயலாளரான நான் எனது அமைச்சரை சந்திக்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன்.
இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை கூட சந்திக்க கஷ்டமாக இருந்தது. அவருக்கு அதற்கான
நேரம் இருக்கவில்லை. ஒரு கையொப்பம் பெறவே மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்தே அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்த தகவலையும்
புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு கூறியிருக்கும் என்று நான் நினைத்ததால் ஜனாதிபதிக்கு
எந்த அறிவிப்பையும் நான் வழங்கவில்லை. தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் என்னை சந்திக்க
அழைத்தாலும் அவரை சந்திக்கச் செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை – என்றார்.