நயினாதீவில் செத்தவீட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று!! நயினாதீவு தனிமைப்படுத்தும் அபாயம்!!
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நயினாதீவில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நயினாதீவில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை காலமாகியிருக்கின்றார்.
அவர் வயோதிபப் பெண் என்பதால் அவருடைய மரணம் இயற்கையான மரணம் என்று எண்ணி அவருடைய இறுச்சடங்கு நடைபெற்றுள்ளது.
சாதாரண மரண நிகழ்வு போன்றே குறித்த மரண நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. நிகழ்வில் கிராமத்தவர்கள் பலரும் பங்குகொண்டிருக்கின்றனர்.
மறுநாள் உயிரிழந்த பெண்ணின் சகோதரி உட்பட்ட சிலர் உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையை நாடியிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனாப் பரிசோதனைகளில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வயோதிபப் பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் உயிரிழப்பவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற நடைமுறை காணப்படுகின்ற நிலையிலும் நயினாதீவில் வசதிகள் பிரச்சினை காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு பிசிஆர் பரிசோதனை நடைபெற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறாரா? என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
சம்பவத்தினை அடுத்து மரணச்சடங்களில் பங்கேற்றவர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் என கிராமத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.