புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு துணுக்காய் காடு படையினரால் பெரும் சுற்றிவளைப்பு!!

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள்
நடமாடுவதாகத் தெரிவித்து இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை
முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுசுட்டான் காட்டுபகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பகலாகத் தேடுதல் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்ட நிலையில் தென்னியங்குளம் காட்டுப் பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்படுகிறது.

துணுக்காய் தென்னியங்குளம் காட்டுப்பகுதிக்குச் சென்று திரும்பியவர்கள் உழவு இயந்திரம்
பழுதடைந்த்தால் அதனை காட்டுக்குள் நிறுத்திவைத்துவிட்டு வந்துள்ளனர். அதனை மீட்பதற்காக
அங்கு நேற்றுச் சென்ற போது, உழவு இயந்திரப் பெட்டிக்குள் கறுப்பு உடை அணிந்த மூவர்
அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர்.

அதனால் தமது கிராமத்துக்குத் திரும்பிய உழவு இயத்திரத்தை எடுக்கச் சென்றோர் மேலும்
சிலரை அங்கு அழைத்துச் சென்ற போது, உழவு இயந்திரப் பெட்டியில் இருந்தவர்களைக் காணவில்லை.

சம்பவம் தொடர்பில் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து தென்னியங்குளம்
காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து இராணுவத்தினர் தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, நேற்றுமுன்தினம் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதிக்கு வெள்ளை வானில் வந்திறங்கிய
சிலர் சென்றதை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவ்வாறு சென்றவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
இருந்த்தையும் மக்கள் அவதானித்துள்ளனர்.

அதனையடுத்து ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரவு பகலாக நடந்த இந்தத் தேடுதலில் எவரும் கைது
செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பது போன்று படையினர்  நிலைகொள்வதற்கான நடவடிக்கைகளாகவும் இவை இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.