கொரோனாவின் நீண்ட கால பாதிப்புக்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடும் பாதிப்புக்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நோயாளிகள் தொற்று ஏற்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னரும் சோர்வு, தூக்கமின்மை உள்ளிட்ட பலவித பாதிப்புக்களை எதிர்கொள்வது சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் மையமான சீனாவின் வுஹான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,700 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் 76% பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சில மாதங்களாவது பாதிப்புக்களை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்தாலும் கூட அவா்கள் நீண்டகால உடல் நலப் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையே இந்த ஆய்வு முடிவு காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது உலகளவில் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக்குப் பின்னரான நீண்டகாலப் பாதிப்புக்கள் குறித்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆய்வாக இது கருதப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவு லான்செட் என்ற மருத்துவ இதழில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தொற்றுக்குள்ளாகி மீண்டவர்களிடையே நீண்ட காலம் நீடிக்கு சோர்வு மற்றும் தூக்கமின்மை என்பன பொதுவான பாதிப்புக்களாக அடையாளம் ஆய்வில் காணப்பட்டுள்ளன.
தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களில் 63 வீதம் பேர் 6 மாதத்துக்குப் பின்னரும் சோர்வை அனுபவிக்கிறார்கள். 26 வீதம் பேர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகால உளவியல் சிக்கல்களையும் எதிர்கொள்வதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களில் 23% நோயாளிகளிடையே கவலை அல்லது மனச்சோர்வு போன்ற விளைவுகள் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லான்செட் என்ற மருத்துவ பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளாகிக் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமைக்கான ஆதரங்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகத்துக்கு புதியது என்பதால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏற்படும் நீண்டகாலத் தாக்கங்களில் சிலவற்றை இப்போதுதான் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சீனா-ஜப்பான் நட்புறவு மருத்துவ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பின் காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொற்று நோயிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னரும் பலர் நீண்டகால தாக்கங்களோடு வாழ்கின்றனர் என்பதை எமது ஆய்வு நிரூபிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.