புதினங்களின் சங்கமம்

யாழ் செயலகத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான உத்தியோகத்தரும் வாள்வெட்டுக் குழு உறுப்பினராம்?

யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் வைத்து உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் மல்லாகம் பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இன்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தாக்குதலில் காயம் அடைந்த உத்தியோகத்தரும் முன்னர் வாள்வெட்டுக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டவர் என்று தெரிவிக்கப்படுவதாக பொலிஸாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபையில் பணியாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது மாவட்டச் செயலக வாயில் பகுதியிலும் பின்னர் வளாகத்துக்குள்ளும் வைத்து வாள் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார் என்பது தெரிந்ததே.

இதேவேளை இன்று யாழ்ப்பாணத்தின் பிரபல வாள் வெட்டுச் சந்தேக நபர்களாக சொல்லப்படுகின்ற தனு ரொக் மற்றும் விக்ரர் டிலான் ஆகிய இருவரையும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.