இந்தியச் செய்திகள்

அக்காவின் கலியாணம் வரை எனது பாலியல் உறவுகளை அடக்கினேன்!! திருநங்கையின் வாக்குமூலம்!!

என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டுப் போறாங்க..!” எனத் தனக்கே உரித்தான வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார் தையல் நாயகி.
பட்டுக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வரும் திருநங்கை. இவருடைய வாழ்வில் இவர் சந்தித்த கசப்பான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமம்தான் என் பூர்வீகம். நான், அம்மா, அப்பா, அக்கான்னு கலகலப்பான குடும்பம் எங்களுடையது. எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். ஸ்கூல்ல பொம்பளை புள்ளைங்க கூடவேதான் இருப்பேன். அதனால வாத்தியார், பசங்கன்னு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. வீட்டிலும் நிறைய அடி வாங்கியிருக்கேன். ஆனாலும், எனக்குள்ள இருந்த பெண் தன்மையை என்னால மறைக்க முடியலை. ஒருகட்டத்துக்கு மேல வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். திருநங்கைன்னா பொண்ணாவே மாறிடுவாங்கங்குறதெல்லாம் எனக்குத் தெரியாது. டவுசர் போட்டுட்டு ஒரு கடையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போ ஒரு நாள் எங்க கடைக்கு ஒரு அம்மா வந்தாங்க.

அவங்க பார்க்க ஆம்பளை மாதிரி தெரிஞ்சாலும் பெண் உடையில் இருந்தாங்க. அப்போ எங்க கடையில் வேலை பார்க்கிறவங்க இவங்க உன்னை மாதிரின்னு சொன்னாங்க. அப்போதான் திருநங்கையாக நாம மாறிட்டால் நடை, உடை, பாவனைன்னு எல்லாமே மாத்திக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். அவங்ககிட்ட போய் நானும் உங்களை மாதிரிதான்னு சொல்ல எனக்கு பயம். தூரமா இருந்து அவங்களைப் பார்த்துட்டே இருக்க ஆரம்பிச்சேன். இதெல்லாம் அவங்க தெரிஞ்சுகிட்டு என்னைக் கூப்பிட்டு வீட்டுக்கு போகச் சொல்லி அட்வைஸ் பண்ணாங்க. இது ரொம்ப கஷ்டமான வாழ்க்கை கண்ணு.. இது உனக்கு வேண்டாம்னு சொன்னாங்க. இல்ல.. எந்த கஷ்டம்னாலும் ஏத்துக்கிறேன்.. எனக்கு பிடிச்ச வாழ்க்கையைக் கொஞ்ச நாளாவது வாழணும்னு ஆசைப்படுறேன்னு சொன்னேன். திருநங்கைனாலே இப்படித்தான்னு ஊர் மக்கள் சொல்ற அளவுக்கு நடந்துக்கக் கூடாது. ரொம்பவே கெளரவமா வாழ்ந்து காட்டணும்னு சொன்னாங்க. அப்போதிலிருந்தே கடை ஏறுதல், பாலியல் தொழில்னு எந்தத் தொழிலும் செய்ய மாட்டேன். ஒரு கடையில் சமையல் வேலை பார்த்துட்டு இருந்தேன். எங்க ஊர்க்காரங்க மூலமா நான் இருக்கிற இடத்தை எங்க வீட்டுல கண்டுபிடிச்சிட்டாங்க. உன்னால உன் அக்காவுடைய வாழ்க்கை பாதிக்கப்படணும்னு விரும்புறீயான்னு அழுதாங்க. என்னால அவங்க ஏன் கஷ்டப்படணும்னு அவங்க கூட மறுபடி வீட்டுக்குப் போனேன்.

என்னைப் பையனாகப் பார்க்கத்தான் அவங்க விரும்புனாங்க. `என் ஆண்மை என்னுடைய நிழல்.. என் பெண்மை என்னுடைய உசுரு’ன்னு என் பெற்றோர்களுக்குப் புரியலை. என் அக்காவுக்கு திருமணமாகி அவ லைஃப்ல செட்டில் ஆகுற வரைக்கும் என் ஆசைகளுக்கு, உணர்வுகளுக்குத் தடை போட்டுட்டு இருந்தேன். ஒருகட்டத்துக்கு மேல எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பார்த்து கட்டி வைக்கப் போகிறதா சொன்னாங்க. ஏன் இவங்களுக்கு நான் சொல்றது புரியவே இல்லை.. இதே பெற்றோர்கள் உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம்னு சொன்னாங்கன்னா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு மனசு கெடந்து ஏங்கும். அக்கா லைஃப்ல செட்டிலாகிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் மறுபடியும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்.

அவங்க கண்டுபிடிக்காத அளவுக்கு எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாத கிராமத்துக்குப் போனேன். அங்கே கட்டட வேலை பார்த்துட்டு இருந்தேன். நல்லா உழைச்சு சம்பாதிச்சேன். மன்னார்குடி, காரைக்கால்னு பல ஊருக்குப் பிழைப்புக்காகப் போனேன். கடைசியா மன்னார்குடி வந்தேன். மன்னார்குடி வந்ததுக்கு அப்புறமா நான் திருநங்கையாக மாற மனசளவில் தயாரானேன். என்னுடைய 21 வயசுல ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து நாம உசுரோட வெளியே வருவோமான்னு தெரியாதுன்னு ஆஸ்பத்திரிக்குப் போகிறதுக்கு முன்னாடி மஞ்சள் பூசி, குங்குமம் வைச்சு இத்தனை நாள் இதுக்காகத் தானே தவிச்சிட்டு கெடந்தோம்னு பல கனவுகளோடும், ஆசைகளோடும் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். ஆபரேஷன் முடிஞ்சு கண்ணைத் திறக்கும்போது புது மனுஷியா இந்த உலகத்துக்கு வந்த உசுராக என்னை நினைச்சேன்.

அதுக்கிடையில் டிபன் கடை நடத்த ஆரம்பிச்சேன். என் கை மணம் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. சமைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடையில் வருகிற வருமானத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிச்சேன். வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். என்னை மாதிரி வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கைகளை மகளாக ஏத்துக்கிட்டேன். கொஞ்ச வருஷம் போனதுக்கு அப்புறமா எங்க வீட்டுக்கு  போன் பண்ணி நான் திருநங்கையாக மாறினதைப் பற்றிச் சொன்னேன். உடனே வீட்டுக்கு வரச் சொன்னாங்க. எந்த ஊரிலிருந்து பயந்து ஓடி வந்தேனோ அதே ஊருக்குச் சேலை கட்டி, பூ வைச்சு, மஞ்சள் பூசி பொண்ணு மாதிரி போய் இறங்கினேன். வீட்டுல முதலில் என்னை ஏத்துக்க மறுத்தாலும் பிறகு என்னைப் புரிஞ்சிகிட்டாங்க. நான் கெளரவமா செய்யுற தொழில் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. என் அம்மா, அப்பா என் கூட பட்டுக்கோட்டையில்தான் இருக்காங்க. டிபன் கடையில் வருகிற பணத்தில் எங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழுறேன் என்கிறார், இந்தத் தன்னம்பிக்கை மனுஷி தையல் நாயகி.