யாழ். வர்த்தக கண்காட்சியில் இளம் விவசாயி கிரிசனைத் தேடிச் சென்று இலைக்கஞ்சி சுவைத்த இந்தியத் துணைத் தூதுவர் (Videos, Photos)

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை(24) முற்பகல்-11 மணியளவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

குறித்த கண்காட்சியில் இயற்கை வழி விவசாயியான அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிசன் இயற்கை விவசாய விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கிய இலைக்கஞ்சி தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். அவரது விழிப்புணர்வுக்கு இந்தக் கண்காட்சியில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது.

யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. பாலச்சந்திரன் குறித்த கண்காட்சியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் மகேஸ்வரநாதன் கிரிசனைத் தேடிச் சென்று அவரிடம் இலைக்கஞ்சி பெற்றுச் சுவைத்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மாத்திரமன்றி அவருடன் சென்ற குழுவினருக்கும் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் கிரிசனிடம் இலைக்கஞ்சி பெற்று வழங்கியுள்ளார். அத்துடன் குறித்த இலைக்கஞ்சியின் தனிச் சுவை தொடர்பிலும் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் மெச்சியுள்ளார். யாழ். இந்தியத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரிடம் பணம் எதனையும் பெறாது அவர்களுக்கு இலவசமாக இலைக்கஞ்சி வழங்கியுள்ளார் கிரிசன்.

மேலும், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் தன்னை நாடி வந்து இலைக்கஞ்சி பெற்றுச் சுவைத்தமை தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத இனிய அனுபவமென அல்லை இளம் விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்கு நான் வழங்கிய இலைக்கஞ்சியின் சுவை மிகவும் பிடித்திருந்தது. இதற்காக எனக்குப் பாராட்டுக்களும் தெரிவித்திருந்தார். மக்களும் விரும்பி அருந்துகிறார்கள்.

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் இயற்கை விவசாயம் சார்ந்து எனக்கு உரிய ஆதரவு வழங்குவதாக உறுதியளித்ததுடன் எனது பண்ணையை நேரில் வந்து பார்வையிட விரும்புவதாகவும் கூறியிருந்தார். மிகவும் சந்தோசமாகவிருக்கிறது என்றார்.

error

Enjoy this blog? Please spread the word :)