புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு புகுந்து இளம்பெண்கள் மூவர் மீது தாக்குதல்- தாயும் மகனும் அடாவடி

வீடொன்றில் புகுந்த பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் சகோதரிகளான 3 இளம் பெண்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பித்தனர். தாக்குதலுக்குள்ளான இளம் பெண்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடும்பிராய் தெற்கு யோகபுரத்தில் திங்கட்கிழமை(1) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
முன்பள்ளியின் பாவனையில் இருந்த காணி ஒன்றை கோப்பாய் பிரதேச செயலாளரால் வீட்டுத் திட்டத்துக்காக குடும்பம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் நீடிக்கும் குழப்ப நிலையின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ரெம்சிகா (வயது -23), ரம்யா (வயது-18) மற்றும் யெனுஷா (வயது-16) ஆகிய மூன்று பேருமே தாக்குதலுக்குள்ளாகினர்.முன்பள்ளியின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் அத்துமீறிய பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.தாக்குதலை நடத்திய பெண்ணும் அவரது மகனும் தம்மை மூன்று பெண்கள் தாக்கிவிட்டனர் எனத் தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலைத்துக்கு ஓடிச் சென்று முறைப்பாடு வழங்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் இருத்திவைத்துள்ளனர்.

உடும்பிராய் தெற்கு யோகபுரம் பகுதியில் முன்பள்ளி ஒன்றின் பாவனையிலிருந்த அரச காணியை குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக கோப்பாய் பிரதேச செயலரால் சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. அந்தக் காணியில் தற்போது வீட்டுத் திட்டத்தில் வீடு அமைக்கப்படுகிறது.தமது பாவனையிலிருந்த காணியை பிரதேச செயலர் தன்னிச்சையான முடிவுடன் அந்தக் குடும்பத்துக்கு வழங்கிவிட்டார் என முன்பள்ளியுடன் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கடந்த மாதம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அந்தக் காணியில் வீடு அமைத்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் மீதே இன்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.