Latestபுதினங்களின் சங்கமம்

வவுனியா மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியசாலை பணிப்பாளர்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலின் நோய் அதிகரித்து காணப்படுவதினால் இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக எலிக்காச்சலின் தாக்கம் வவுனியாவில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது கடந்த 2018ம் ஆண்டு அதிகமான நோயாளர்கள் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எலிக்காச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் 70 ஆண்களும் 20 பெண்களும் சிகிச்சை பெற்றுள்ளதுடன். இந்த வருடம் மார்ச் மாதம் வரை 23 ஆண்களும் 8 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

வவுனியாவில் எலிக்காச்சால் நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் வயல்களில் பணிபுரிபவர்களாலே. வயல்களில் எலியின் சிறுநீரில் இருந்தே கிருமி மனிதர்களை தாக்குகின்றது.

எலி எங்கேங்கு கூடுதலாக காணப்படுகின்றதோ அந்த இடங்களிலிருந்து கிருமி மனிதரை தாக்கி எலிக்காச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் பணிபுரியும் பொதுமக்கள் எலிக்காச்சலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

அப்படியான இடங்களில் பணிபுரிபவர்கள் கால்கள் , கைகளில் காயங்கள் இருக்குமாகவிருந்தால் அவற்றுக்குரிய பாதுகாப்பு அதாவது நீளமான பாதணி அணிதல் வேண்டும் அல்லது காலுறைகளை அணிந்து பணிபுரியலாம் . எலியின் சிறுநீர் காயங்களில் படாதவாறு அவதானித்து கொள்ளுதல் வேண்டும் .

கிருமிகள் காயங்களிலுடாக , கண் , வாய் போன்ற மெல்லிய தோல்களினுடாக உடலுக்குள் சென்று இந்த நோயை ஏற்படுத்துகின்றது. காய்ச்சல் போன்ற எதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.