மாறி மாறி வீடுகள் மீது தாக்குதல்!! ஆவா குழுக் காவாலிகள் 3 பேர் கைது!!
மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள வீடு மற்றும் நவாலி அரசடியிலுள்ள வீடு ஆகியவற்றுக்குள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.
நவாலி அரசடி வீதியிலுள்ள கிருஷ்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்த கும்பல் தந்தையும் மகனையும் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தது.
அத்துடன், மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு யன்னல்கள், கதவுகள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தது.
இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு இளைஞர்களை இன்று காலை கைது செய்தனர்.
நவாலி அட்டகிரியைச் சேர்ந்த இருவரும் உடுவிலைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் கடந்த பெப்ரவரி மாதம் வீடொன்றுக்குள் புகுந்து வான் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த கும்பலைச் சேர்ந்தவரின் வீடே மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் தாக்கப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினார்.
அத்துடன், நவாலி அரசடியில் தாக்கப்பட்டவர் நீதிமன்றில் சாட்சியமளித்ததாக தாக்கப்பட்டார் எனவும் சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் கூறினர்.