Vampan memes

யாழ் மாநகரசபை உத்தியோகத்தருக்கு வந்த கலியாண ஆசை!! கட்டடங்கள் அலங்கோலமானது!!

யாழ் மாநகரசபையில் தொழில்நுட்ப அலுவலர் ஒருவரின் திருமணம் தடைப்படக் கூடாது
என்பதற்காகவே யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள்
மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் மாநகரசபையின் கூட்டத் தொடரில் இந்த தகவல் வெளியானது.

சட்டவிரோத கட்டிடங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்தால் தனது திருமணம் பாதிக்கப்பட்டு விடும்
என தொழில்நுட்ப அலுவலர் அச்சம் தெரிவித்துள்ளதாக சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் இருந்து ஜும்மா பள்ளிவாசல் வீதிக்கு செல்லும் இணைப்பு வீதி இப்போது
இல்லை. அந்த வீதியை காணவில்லை என யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மாநகர சபையில்
குற்றம் சாட்டினார். மின்சார நிலைய வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றை, அந்த வீதியை
ஆக்கிரமித்து வர்த்தக நிலையத்தை அமைத்துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள்
அமைக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 40 கட்டடங்கள் தொடர்பில்தான் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிராக மட்டும் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறதே தவிர,
அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை என்றும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இதற்கு பதிலளித்த பொறியியலாளர்- முறையற்ற கட்டுமானங்கள் மீது வழக்குத் தொடுப்பது
சபையின் தொழில்நுட்ப அலுவலரின் பணி. முறையற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை
எடுக்குமாறு அவருக்கு பணித்தாலும் அவர் நடவடிக்கை எடுக்க முன்வருகிறார் இல்லை என
தெரிவித்தார்.

இதையடுத்து, தொழில்நுட்ப அலுவலர் மீது உறுப்பினர்கள் காரசாரமான குற்றச்சாட்டுக்களை
சுமத்தினர். அவர் இந்த சபைக்கு தேவைதானா?, கடமையை செய்ய தயங்கும் அவரை இடமாற்றம் செய்ய
வேண்டுமென கொந்தளித்தார்கள்.

இதற்குப் பதிலளித்த போதே யாழ் மாநகரசபை முதல்வர், திருமணம் தொடர்பான மேற்படி
அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

“தொழில் நுட்ப ஆணையாளர் வழக்கு போட தயங்குவதற்கான காரணத்தை என்னிடம் ஆணையாளரிடமும்
தெரிவித்தார். அதைக் கேட்டு நாம் வியப்படைந்தோம். தான் திருமணம் செய்யாதவர் எனவும்,
வழக்கு தாக்கல் செய்தால் அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும்,
நீதிமன்றம் சென்று வந்தால் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என்றும் எம்மிடம் தெரிவித்தார்“
என்றார்.

இதையடுத்து, தொழில்நுட்ப அலுவலரை நீக்கி விட்டு, புதிய அலுவலரை நியமிக்க
வேண்டுமென்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையில், சட்டவிரோத கட்டடங்கள் மீதான
சட்ட நடவடிக்கையை, அவசரமாக மாநாகரசபையின் சட்டத்தரணி ஊடாக மேற்கொள்ள வேண்டுமென்று
உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது, இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.

“மாநகரசபையின் சட்டத்தரணியே பருத்தித்துறை வீதியில் அனுமதியில்லாத கட்டடம் ஒன்றை
கட்டுகிறார். அவர் எப்படி சட்டவிரோதமான கட்டடத்திற்கு எதிராக நடபடிக்கை எடுப்பார்?“ என
இன்னொரு உறுப்பினர் கேள்வியெழுப்பினார்.

சட்டத்தரணியை ஏன் குற்றம்சுமத்துகிறீர்கள், சபை உறுப்பினர்கள் இருவர் கூட சட்டவிரோத
கட்டடங்கள் அமைக்கிறார்கள் என மற்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த விடயத்தை ஆராய சுற்றிசுற்றி தமது அடி மடிக்குள்ளேயே வந்து முடிகிறது என்றோ
என்னவோ, சட்டவிரோத கட்டடம் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்காமல் விட்டு விட்டார்கள்.